யார் இந்த பிறைசூடி இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன தொடர்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ தேசியத் தலைவரின் உயிர் நண்பர்களில் ஒருவருமான பிறைசூடி காலமானார் என அதிர்வு இணையம் அறிகிறது. தமிழீழம் ,வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த ஐயா பிறை சூடி (கப்டன் டேவிட்)அவர்கள் தமிழ்நாடு சென்னையில் நேற்று(3) காலமானார் எனத் தெரியவருகிறது. 1983 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்காக வர்த்தக கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று சிந்தித்தபோது,திரு.பிறைசூடி அவர்கள் பற்றிய தகவல் கிட்டுவின் சகோதரர் மூலம் தலைவருக்கு கிடைத்தது.
இவரைப்பற்றி கேள்விப்பட்ட தேசியத் தலைவர் அவர்கள், இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களாக (அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்த) பண்டிதர்,மற்றும் ரகுவப்பா ஆகியோரிடம் பிறைசூடி அவர்களைச் சந்தித்து உரையாடி அவரின் சம்மதத்தினை பெற்று வருமாறு அனுப்பி வைத்தார். போராளிகள் இருவரும் கிட்டு அவர்களின் அண்ணாவோடு திக்கத்தில் அமைந்திருந்த பிறைசூடி அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்து தாங்கள் வந்த நோக்கத்தையும்,தலைவர் அவர்கள் தங்களை அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்தபோது எதுவித மறுப்புத் தெரிவிக்காது முழு மனதோடு சம்மதித்தது மாத்திரமன்றி அப்பொழுதே 1லட்சம் ரூபாவை அவர்களிடம் கையளித்து அம்முயற்சிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
ரகுவப்பா சென்னைக்கு வந்து எங்களை, சந்திக்குமாறு கூறிவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார். சில தினங்களிலேயே சென்னைக்கு வந்து சேர்ந்த பிறைசூடி அவர்கள் முதலில் ரகுவப்பாவை சந்தித்து பின்னர் தேசிய தலைவரையும் சென்னையில் வைத்து சந்தித்திருந்தார். தலைவர் அவர்கள் திரு.பிறைசூடியிடம் விபரமாக தங்கள் எண்ணக் கருத்தினை எடுத்து விளக்கியுள்ளார்.முழு மனதோடு அப்பணிக்கு தன்னை அர்ப்பணிப்பதாக தெரிவித்ததோடு அதற்கான ஆரம்ப வேலைகளிலும் உடனடியாக ஈடுபட்டார். அப்பணியின் பொருட்டு திரு.பிறைசூடி அவர்களும்,ரகுவப்பாவும் பம்பாய் சென்று அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டார்கள்.சில காலங்களின் பின் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற அவர் அங்கு கப்பல் கம்பனிக்கான பதிவு வேலைகளை திறம்பட செய்து முடித்தார்.
1985ஆம் ஆண்டளவில் தேசியத் தலைவரின் கனவு நனவாகியது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது வணிகக் கப்பலான ‘சோழன்’ கொள்வனவு செய்யப்பட்டது. ‘சோழன்’ கப்பல் வணிக சேவையை வெற்றிகரமாக ஆரம்பித்து தொடர்ந்து இயக்கத்திற்காக நிதியை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியது.எந்தக் காலத்திலும் சோழன் கப்பலில் ஆயுதங்களோ,தடை செய்யப்பட்ட பொருட்களோ ஏற்றப்பட்டது கிடையாது. தனது வாழ்நாளில் பெரும் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும்,அதன் வளர்ச்சிக்காகவும் செலவிட்ட ‘கப்டன் டேவிட்’என்று அழைக்கப்பட்ட திரு.பிறைசூடி அவர்களின் நாமம் தமிழீழம் இருக்கும்வரை தாங்காது நிலைபெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அன்னாரை இழந்து துயருற்றிருக்கும் குடும்பத்தினர்க்கு தமிழீழ மக்களின் சார்பில் ஆறுதல் தெரிவிப்பதோடு வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..தாங்க முடியாத துயரோடு
No comments: