அமெரிக்காவில் தொழிற்சாலையில் நேர்ந்த பயங்கர சம்பவம்
அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
ஜனநாயக நாடான அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்க அந்த நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்து உள்ளது. இதனால் அங்கு பெரும்பாலானவர்கள் நவீன துப்பாக்கிகளை வைத்துள்ளனர்.
ஆனால் இதுவே அமெரிக்க அரசுக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. ஏனெனில் பல்வேறு காரணங்களுக்காக சிலர், சக குடிமக்களை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அங்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் மீண்டும் ஒரு சம்பவம் தற்போது அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்துக்கு உட்பட்ட சிகாகோ நகரின் புறநகர் பகுதியான அரோராவில் ஹென்றி பிராட் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களுக்கான வால்வுகள் தயாரிக்கும் இந்த நிறுவனம் வட அமெரிக்காவின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு கட்டிடம் ஒன்றில் நேற்று முன்தினம் பகலில் மும்முரமாக பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பணியாற்றிக்கொண்டு இருந்த கேரி மார்ட்டின் (வயது 45) என்ற ஊழியர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சக ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார்.
இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் பின் ஒருவராக சரிந்தனர். இதைப்பார்த்த பிற ஊழியர்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்வதற்காக அங்கும் இங்கும் ஓடினர். இதனால் தொழிற்சாலையில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் குண்டு பாய்ந்து 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து உடனே அரோரா நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் ஹென்றி பிராட்டை சரணடையுமாறு கூறினர். ஆனால் அவர் போலீசாரையும் நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 6 போலீசார் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். காயமடைந்த போலீசார் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவமாக இது கருதப்படுகிறது. அதேநேரம் 5 அல்லது அதற்கு மேல் உயிரிழப்புகளை ஏற்படுத்திய 3-வது சம்பவம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சிகாகோ நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
No comments: