திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்
மேலூர் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தப்பட்டார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை, மேலூர் அருகேயுள்ள மெய்யப்பன் பட்டியைச் சேர்ந்த ராசு மகள் ரவிதா (வயது 19). இவர் மேலூரில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ரவிதா சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது மேலூர் சருகு வளையப்பட்டியைச் சேர்ந்த மனோஜ் (20) என்பவர் திருமண ஆசை காட்டி ரவிதாவை கடத்திச் சென்று விட்டார்.
இதற்கு மனோஜின் தந்தை வெள்ளைக்கண்ணு, தாய் மலர், உறவினர்கள் செல்வம், நாச்சம்மாள் மற்றும் தங்கம் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக ரவிதாவின் தாய் லட்சுமி கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டு பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மதுரை ஊமச்சிக்குளம் அருகிலுள்ள செல்லாயி புரத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகள் வந்தனா. இவர் நேற்றிரவு டியூசன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கவுதம், பகத்சிங், விஜய், திருப்பதி, பிரசாந்த், அஜித்பாண்டி ஆகிய 6 பேரும் வந்தனாவை கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது.
இதனை தங்கராஜ் தட்டிக்கேட்டார். எனவே 6 வாலிபர்களும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இது தொடர்பாக தங்கராஜ் ஊமச்சிக்குளம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சாந்த மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments: