பள்ளி செல்லாததை தாய் கண்டித்தால் மாணவர்கள் இப்படியா செய்வது
பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் அண்ணன்-தம்பி 2 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் மேலக்காவிரி வடக்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 40) டிரைவர். இவரது மனைவி சீத்தாலட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூத்த மகன் ஆகாஷ் 8-ம் வகுப்பும், ஹரீஸ் 6-ம் வகுப்பும், ரித்தீஸ் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். அண்ணன்-தம்பியான ஆகாஷ், ஹரீஸ் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். இதனை பெற்றோர் கண்டிப்பது வழக்கம்.
இதேபோல் இன்றும் சகோதரர்கள் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லையாம். ஆனால் 3-வது மகன் ரீத்தீஸ் பள்ளிக்கு சென்று விட்டார். மற்ற இருவரும் பள்ளிக்கு செல்லாததால் ஆத்திரம் அடைந்த தாய் சீத்தாலட்சுமி மகன்கள் 2 பேரையும் கடுமையாக திட்டி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆகாஷ், ஹரீஸ் ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்ததை கண்ட தாய் சீத்தாலட்சுமி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றி கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments: