Header Ads

Header Ads

கனடாவை அச்சுறுத்திய சைக்கோ கொலையாளிக்கு நேர்ந்த கெதி

கனடாவில் 8 பேரை அடுத்தடுத்து கொலை செய்த சைக்கோ கொலையாளிக்கு 8 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை டொரண்டோவில் உள்ள ஒரே பாலினத்தாருக்கான பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து 8 பேர் மர்மமான முறையில் மாயமானார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஆண்ட்ரூ கின்ஸ்மேன் என்பவர் மாயமானதையடுத்து, அவரது நண்பரான புரூஸ் மெக் ஆர்தர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து புரூஸ் மெக் ஆர்தரின் நடவடிக்கைகளை கண்காணித்த போலீசார், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரே பாலினத்தாருக்கான பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் உள்பட 8 பேரை அடுத்தடுத்து கொலை செய்தது தெரியவந்தது.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கொலை செய்யப்பட்டவர்களின் எஞ்சிய உடல் பாகங்கள், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கொலை செய்யப்பட்டவர்களுடன் அவர் எடுத்த புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, புரூஸ் மெக் ஆர்தர், 8 பேரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து புரூஸ் மெக் ஆர்தருக்கு (வயது 67), 8 ஆயுள் தண்டனைகள் விதித்து கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம், அவர் 25 ஆண்டுகளுக்கு பரோல் பெற முடியாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து புரூஸ் மெக் ஆர்தர், சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Powered by Blogger.