விடுதலைப் புலிகள் கையாண்டது திருவாங்கூர் மன்னனின் யுக்தியா ?
இந்தியாவை கைப்பற்ற வந்த டச் நாட்டு தளபதி, திருவாங்கூர் மன்னுக்கு தளபதியான கதை பலருக்கு தெரியாது. திருவாங்கூர் மன்னன் கையாண்ட யுக்தியையே விடுதலைப் புலிகளும் கையாண்டார்கள் என்றால் அது மிகையாகாது. பெல்ஜியத்தைச் சேர்ந்த `யுஸ்டேஷியஸ் பெனடிக்ட் என்னும் தளபதியின் தலைமையில், பெரும் கப்பல் படை ஒன்று நாஞ்சில் (நாகர்கோவிலுக்கு அருகே) கடல் கரையில் 1741 ல் தரை இறங்கியது. நாகர்கோவிலிலிருந்து தக்கலை செல்லும் மார்க்கத்தில் இருக்கிறது புலியூர்க்குறிச்சி கிராமம். இங்கிருந்து நடக்கும் தூரத்தில் அமைந்திருக்கிறது உதயகிரி கோட்டை. அப்போது மன்னர் மார்த்தாண்ட வர்மா கர்நாடக நவாப்களுடன் போரிட்டுக் கொண்டிருந்ததால் டச்சுக் கடற்படையின் தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை.
போருக்குத் தயாராகுவதற்குப் போதிய அவகாசமும் இல்லை. அதனால், உள்ளூர் மக்கள் துணையுடன் டச்சுக் கடற்படை வீரர்களை எதிர்க்கத் தயாரானார் மன்னர். தந்திரத்துடன் மலையின் மீது மாட்டு வண்டிகளை வரிசையாக நிற்க வைத்து, அவற்றின் மீது பனை மரத்தடிகளைப் பொருத்திவைத்தார். இவற்றைத் தொலைவிலிருந்து பார்க்கும் போது பீரங்கிகள் அணிவகுத்து நிற்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. அதே போன்று கடலில் உள்ளூர் மீனவர்களைப் படகுகளில் நிற்கவைத்து கைகளில் துடுப்புகளைத் தூக்கிப்பிடித்தபடி அணிவகுத்து நிற்கச் செய்தார். தொலைவிலிருந்து பார்த்தால் கைத் துப்பாக்கிகளுடன் நிற்பதைப் போன்று இருக்கும். விடுதலைப் புலிகள் கூட சில யுத்தமுனைகளில் தமது படை பலத்தை பன் மடங்காக உயர்த்திக் காட்டியே, சிங்கள ராணுவத்தை திகைக்கவைத்து வெற்றிகளை ஈட்டினார்கள்.
டச்சு வீரர்கள் துப்பாக்கி, பீரங்கி போன்ற நவீன ஆயுதங்களுடன் தாக்கியபடி முன்னேறினார்கள். மலையை நோக்கி முன்னேறியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மலைமேல் வரிசையாக பீரங்கிகளைப் போன்று அணி வகுத்து நின்ற மாட்டு வண்டிகளையும், படகு மற்றும் கப்பல்களில் துடுப்புகளுடன் நின்ற மீனவர்களையும் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து பின்வாங்கினார்கள். டச்சு வீரர்கள் மனதளவில் சோர்ந்து போனார்கள். சுற்றிவளைக்கப்பட்டவர்கள் தயக்கத்துடன் முன் சென்று தாக்குதல் தொடுக்காமல் தகுந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் நீண்ட கடல் பயணத்தாலும் உள்ளூர் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமலும் டச்சு வீரர்கள் நோய்வாய்ப்படத் தொடங்கினார்கள். இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் ஆங்கிலேயர்களின் ஆயுத உதவியுடன் டச்சு வீரர்களைத் தாக்கினார். டச்சுப் படையின் வெடிபொருள்கள் இருந்த கப்பல் தீப்பிடித்தது. சில டச்சு தளபதிகளும், வீரர்களும் தப்பித்துச் சென்றுவிட்டாலும் பெரும்பாலான டச்சு வீரர்கள் வேறுவழியின்றி சரணடைய வேண்டியதாயிற்று.
டச்சுப் படையின் தளபதிகளுள் ஒருவனான டிலெனாயை அரசர் முன்பாகக் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் கொண்டுவந்து நிறுத்தினர். முதல் பார்வையிலேயே மனிதர்களைக் கணிக்கும் திறன்கொண்ட மன்னர் மார்த்தாண்ட வர்மா, அவனை உற்று நோக்கினார். டிலெனாயின் வீரமும் திறனும் உடையவன் என்பதை அவரால் அறிந்துகொள்ள முடிந்தது. அவரைச் சிறையிலடைக்க உத்தரவிட்டார். ஏற்கெனவே மன்னரின் படையில் ஐரோப்பிய வீரர்கள் பலர் இணைந்திருந்தனர். அவர்களின் பணி ஐரோப்பியர்களின் ஆயுதங்களான பீரங்கி, துப்பாக்கி ஆகியவற்றை இயக்க திருவிதாங்கூர் வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதே. சிறையில் இருக்கும் டிலெனாயினின் போர்க்கருவிகள் குறித்த அறிவைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டார் மார்த்தாண்ட வர்மர். அவரைத் தன் நாட்டு வீரர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குமாறு உத்தரவிட்டார். டிலெனாயின் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தன் திறம் முழுமையையும் திருவிதாங்கூர் சமஸ்தானப் படை வீரர்களுக்குத் திறம்பட பயிற்சி அளித்தான். இதனால் மகிழ்ந்த மன்னர் டிலெனாயை தளபதியாக நியமித்தார். மார்தாண்டரின் தளபதியாக டச்சு வீரன் மாறினான்.
டிலெனாயால் திருவிதாங்கூர் சமஸ்தானப் படை நவீனமாகத் தொடங்கியது. உதயகிரி கோட்டையை வலிமையான கோட்டையாக மாற்றினார் டிலெனாய். இங்கு, ஆயிரக்கணக்கான வீரர்களுக்குப் பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்பட்டது. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற போர் தளவாடங்கள் தயாரிக்கும் பட்டறைகள் செயல்படத் தொடங்கின. உதயகிரி கோட்டை வலிமையான தளமாக மாறியதால் அந்தப் பகுதியில் நிலையான அமைதி ஏற்பட்டது. இதற்குப் பிறகுதான் பொன்மனை அணை, கால்வாய்கள் தோன்றி நாஞ்சில் நாட்டில் விளைநிலங்கள் உருவாகின. நாஞ்சில் நாடு இன்று வளமான பகுதியாக இருப்பதற்குக் காரணம் டிலெனாய்தான். இவரது பெயராலேயே உதயகிரி கோட்டை `தில்லானைக் கோட்டை’ என்று அழைக்கப்படுகிறது.
டிலெனாயின் முயற்சியினால்தான் திருவிதாங்கூர் சமஸ்தானம், குமரி முதல் கொச்சி வரை விரிவடைந்தது. தான் இறக்கும் வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும் விசுவாசமாகப் பணிபுரிந்த டிலெனாய், 1777 -ல் காலமானார். டிலெனாய் விருப்பத்தின்படி அவரது உடல் உதயகிரி கோட்டையிலேயே புதைக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்காக உழைத்த டிலெனாய் தற்போதும் மேற்கூரையில்லாத, பாழடைந்த மாதாகோயிலில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார். `திருவாங்கூர் சமஸ்தானத்துக்காக முப்பது ஆண்டுகள் உழைத்த படைத் தளபதி டிலெனாய் உறங்குகிறார்’ என்று அவரது கல்லறையில் எழுதப்பட்டிருக்கிறது. எதிரிகளையும் மன்னிக்கும் தன்மை சில வேளைகளில் சிறந்த நண்பர்களையும் உருவாக்கித் தந்துவிடுகிறது. அதற்கு உதாரணம் டிலெனாய் – மார்த்தாண்டவர் நட்புதான். வரலாற்றுச் சின்னமாகவும், நட்பின் சின்னமாகவும் போற்ற வேண்டிய உதயகிரி கோட்டை இப்போது சரிவர கவனிக்கப்படாமல் புதர் மண்டி கிடப்பதுதான் வருத்தமளிக்கிறது.
No comments: