Header Ads

Header Ads

கூட்டமைப்பை நம்பத் தயாரில்லை; தமிழ் தாய்மார்கள்

காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைபபு எவ்வாறு ஐநாவிடம் இலங்கை விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்குமாறு கோர முடியும் அதற்கு இவர்கள் யார்? இவ்வாறு மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று(19) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் இணைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் எங்களது போராட்டம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதுவரைக்கும் காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை. கிளிநொச்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அலுவலகத்துக்கு சில வருடங்களுக்கு முன் பிரதமர் ரணில் வருகை தந்திருந்த போது சொன்னார் மகிந்தவின் பிள்ளைகள் காணாமல் போயிருந்தால் அவர்கள் இப்படியிருப்பார்களா? எனவே நான் பதவிக்கு வந்தவுடன் உங்களுக்கு தீர்வை தருவேன் என்றார். இதன்போது பிள்ளை காணாமல் ஆக்கப்பட்ட தாய் ஒருவர் அவரின் காலில் வீழ்ந்து கதறி அழுதார். தனது ஒரேயொரு மகனை மீட்டுத்தருமாறு. ஆனால் பதவிக்கு வந்த ரணில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இல்லை என யாழப்பாணத்திலும், மறப்போம் மன்னிப்போம் என கிளிநொச்சியிலும் தெரிவித்துள்ளார்.
இவர் இவ்வாறு தெரிவித்து போது எங்களது வாக்குகளால் பதவிக்கு வந்த பிரதிநிதிகள் வாய் மூடி மௌனமாக இருந்துள்ளனர். அது மாத்திரமன்றி கடந்த காலத்தில் நடந்துகொண்டது போன்று தற்போதும் இலங்கை விடயத்தில் ஐநாவுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவித்த அவர்கள் நாம் இனியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நம்பத் தயாரில்லை என்றும் தெரிவித்தனர்.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை எதிவரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றுகூடி இலங்கை அரசுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் மற்றும் சர்வதேச சமூகத்துக்கும் தமது நியாயமான கோரிக்கைகளை வெளிப்படுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.
அன்று மாபெரும் பேரணி ஏ – 9 வீதி ஊடாக நகர்ந்து கிளிநொச்சி டிப்போ சந்தியை அடைந்து இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதியிடம் மகஜர் கையளிக்கப்படும்.
இந்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு வடபகுதியில் பூரண கதவடைப்புடன் கூடிய ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு முழுமையான – உணர்வுபூர்வமான பங்களிப்பை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் கோரியுள்ளது..

No comments:

Powered by Blogger.