கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கோத்தா
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமற்போனமை மற்றும் கீத் நொயார் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் இரண்டு முக்கிய புள்ளிகள் இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
”மேற்படி சம்பவங்களுடன் நான் தொடர்புபடவில்லை. இந்த சம்பவங்கள் இரண்டு நபர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காகவே செய்யப்பட்டன. நான் அவர்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. லசந்த படுகொலை செய்த உடனேயே அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா இருவரும் அது இராணுவத் தளபதியின்வேலை எனத் தெரிவித்திருந்தனர். எனினும்இராணுவத் தளபதி அவர்களுடன் சேர்ந்து 2010 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அவர்கள் அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக என்னை குறை கூறுகிறார்கள்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் நான் அப்போது தலையிடாமைக்கான காரணம் நான் முழுமையாக போரில் அவதானம் செலுத்தியமை ஆகும். இந்த விசாரணைகளில் மூழ்கினால் நாம் போரை நிறுத்த முடியாது. இதற்காக புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். நாடெங்கிலும் குண்டுகள் வெடித்தன. பயங்கரவாதிகள் கொலைகளைச் செய்தனர். அவர்களை வேட்டையாடவே நாம் அப்போது செயற்பட்டோம். இதுவே உண்மை.
அப்போதைய இராணுவத் தளபதி எதிரணிப் பக்கம் சாய்ந்த பின்னர் நாம் அவரை தனிப்பட்ட ரீதியாக வேட்டையாடவில்லை. அவர் தொடர்பில் சரியான ஆதாரத்துடனேயே சென்றோம். இந்த விடயம் தொடர்பில் சி.ஐ.டியினருக்கு முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டேன்.
தற்போதைய அரசாங்கம் நேர்மையானது என்றால் அது முறையான வகையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தவேண்டும். அதைவிடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ஒருவர் மீது சுமத்தக் கூடாது. இந்த விடயத்தில் நான் சம்பந்தப்படவில்லை என்பது எனது இதயத்துக்குத் தெரியும்.
லசந்த விக்கிரமதுங்க அப்போது இராணுவத் தளபதி தொடர்பில் விமர்சனமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். எனினும் அப்போதைய நிலைமையில் அவருக்கு எதிராக எவரும் அப்படி ஒரு கட்டுரையை எழுத முடியாது. அப்படி எழுதியபடியால் சில சம்பவங்களும் நடந்தன. அதேவேளை சந்திரிக்காவின் காலத்திலும் லசந்த சந்திரிகா, மங்கள சமரவீர தொடர்பில் விமர்சன கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றை ஏன் வெளியே கொண்டுவரவில்லை? எனினும் இந்த கட்டுரையில் மட்டும் ஏன் அந்த குறிப்பு உள்ளது?
மிக் கொள்வனவு தொடர்பில் வெளிப்படைத்தன்மை உள்ளது. அதனை நாம் நிரூபித்துள்ளோம். தாக்குதல் நடத்துவதற்கு மிக் விமானங்கள் தேவை என சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் விமானப்படை கேட்டது. அந்த தெரிவு அவர்களாலேயே செய்யப்பட்டது. மிக் கொள்வனவில் விமானப்படையே ஈடுபட்டது. இதில் நான் சம்பந்தப்படவே இல்லை. சரியான முறையில் கேள்விகோரல் கோரப்பட்டு நிதி, பேச்சுக் குழுக்களை நியமித்து செய்யப்பட்டது. இது தனிமனித வேலை இல்லை. இந்த பணியில் பல அதிகாரிகள் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்த தலைவர் பின்னர் கணக்காய்வாளர் நாயகமாக இருந்தார்.
உக்ரைன் அரசாங்கம் பிரேரணையை சமர்ப்பித்தது. விமானப்படையைச் சேர்ந்த ஒரு குழு உக்ரைன் சென்றது. அவர்கள் உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். இதில் இரண்டு விமானப்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தனர்.
இந்த மிக் கொள்வனவு தொடர்பான கட்டுரையினாலேயே லசந்த விக்கிரமதுங்க இலக்கு வைக்கப்படார் என யாராவது சொன்னால் அவரால் எழுதப்பட்ட மற்ற கட்டுரைகளுக்கு என்ன நடந்தது? நாம் அதிகாரத்துக்கு வர முன்னர் லசந்தவும் அவரது மனைவியும் தாக்கப்பட்டனர். ஒருமுறை மங்கள சமரவீர லசந்தவைப் பார்த்து நாட்டுப்பற்றில்லாதவர் என தெரிவித்தார்.” என்று கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
No comments: