ஜப்பான் நிறுவனத்தின் அரிய கண்டுபிடிப்பு
ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 3டி வடிவமைப்பில் தயாரித்துள்ள மனித முக அமைப்பின் மாஸ்க்குகள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
ஜப்பானில் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது. இந்நிலையில், மனித முக வடிவமைப்பை சற்றும் மாறாத வகையில் ஜப்பானைச் சேர்ந்த ரியல்-எப் என்ற நிறுவனம் 3டி மாஸ்க்குகளை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயற்கை மாஸ்க்குகள் குறித்து ரியல்-எப் நிறுவனத்தின் உரிமையாளர் ஒசாமு கிட்டகாவா கூறியதாவது:
இதுவரை செயற்கை முகவடிவ மாஸ்க்குகள் 2டியில் மட்டுமே உள்ளன. இதற்கு போதிய தொழில்நுட்பம் இல்லாததே காரணம் ஆகும். செயற்கை மாஸ்க்குகள் வடிவமைப்பில் 3டி மிகவும் சவாலான ஒன்றாகும். இந்த 3டி மாஸ்க்குகள் விளம்பரதிற்கும், மார்க்கெட்டிங் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விளம்பர நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இசை விழாக்கள் போன்றவற்றில் இசையமைப்பாளர்கள் இதனை உபயோகிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். இந்த மாஸ்க்குகள் முகஅமைப்பு மறுபயன்பாட்டு தொழில்நுட்பத்தின் சமீபத்திய தயாரிப்பாகும்.
இதேபோல் கார் தயாரிப்பாளர்களும் 3டி மாஸ்க்குகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த 3டி மாஸ்க்குகளை மென்பொருளுடன் இணைப்பதன் மூலம் ஓட்டுனர் உறங்கிக் கொண்டிருக்கிறாரா என்பது துல்லியமாக தெரிகிறது. இந்த மாஸ்க்குகள் சில வாரங்களிலேயே உருவாக்கப்படுகின்றன. முதலில் முகம் 3டி ஸ்கேனில் பதிவிடப்படுகிறது. பின்னர் புகைப்படம் எடுக்கப்பட்டு, இவை இரண்டையும் கம்ப்யூட்டரில் மென்பொருள் மூலம் இணைத்து இந்த மாஸ்க்குகளுக்கான வடிவம் இறுதி செய்யப்படும்.
இதனையடுத்து பிளாஸ்டிக் முக அமைப்பின் மீது 2டி புகைப்படம் பொருத்தப்படும். இது உறுதியான பிளாஸ்டிக் கொண்டு செய்யப்படுவதால் அசைக்க முடியாதாகும். 3டி பிரிண்டரில் பிரிண்டிங் செய்யப்படுகிறது. இந்த 3டி பிரிண்டர்களில் சில சிரமங்கள் ஏற்படும் போது மாஸ்க்குகள் கைகள் கொண்டு நுணுக்கமாக வரையப்படுகிறது. இதுபோன்ற மாஸ்க்குகள் மருத்துவத்துறையிலும், மனித உருவில் உருவாகும் ரோபோக்களுக்கு பொருத்தவும் பயன்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments: