தேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியின்போது தேசிய கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
நியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 208 ரன்கள் மட்டுமே அடித்து 4 ரன்னில் தோல்வியைத் தழுவியது.
ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் எம்எஸ் டோனி களம் இறங்கினார். அவர் பேட்டிங் செய்யும்போது ரசிகர் ஒருவரும் வலது கையில் இந்திய தேசியக் கொடியை வைத்துக்கொண்டு டோனியை நோக்கி ஓடிவந்தார். வந்த அவர் டோனி காலில் விழுந்து வணங்கினார்.
அப்போது ரசிகர் வைத்திருந்த தேசியக்கொடி மண்ணைத் தொடும் நிலை ஏற்பட்டது. ஸ்டம்பிங் செய்வதில் மின்னல் வேகத்தில் செயல்படும் டோனி, தேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்றும் விதமாக நொடிப்பொழுதில் குனிந்து அந்த வாலிபரிடம் இருந்த தேசியக் கொடியை பறித்தார். இதனால் தேசியக் கொடி மண்ணில் உரசவில்லை. பின்னர் அந்த ரசிகர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்தியாவின் மீதும், தேசியக் கொடி மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருக்கும் டோனியை டுவிட்டர்வாசிகள் பாராட்டி வருகின்றனர்.
No comments: