குற்றவாளியின் கழுத்தில் பாம்பைச் சுற்றி சித்ரவதை செய்த போலீசார்
இந்தோனேசியாவில் போலீசில் சிக்கிய குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால், கழுத்தில் பாம்பினைச் சுற்றி ஆபத்தான விசாரணை மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தோனேசியாவில் செல்போன் திருடிய வழக்கில் பப்புவா போலீசார் வாலிபரை கைது செய்தனர். விசாரணையின்போது அந்த வாலிபர் குற்றத்தினை ஒப்புக்கொள்ளவில்லை. எதுவும் பேசாமல் இருந்துள்ளான்.
இதையடுத்து மிரட்டினால் ஒப்புக்கொள்வார் என நினைத்த போலீசார், மலைப்பாம்பு ஒன்றினை அவன் கழுத்தில் போட்டு சுற்றியுள்ளனர். இதனை வீடியோவும் எடுத்துள்ளனர். அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரவியதும், கடும் சர்ச்சை எழுந்தது.
அந்த வீடியோ பதிவில், குற்றவாளியிடம் போலீசார் கேள்வி கேட்டு விசாரணை நடத்தியது பதிவாகியிருந்தது. அந்த நபர் பதிலளிக்காததையடுத்து, ஒரு அதிகாரி முகத்தின் முன் அந்த பாம்பினை கொண்டு செல்கின்றார். மேலும் ஒரு அதிகாரி எத்தனை முறை இது போன்ற செல்போன்களை திருடி இருக்கிறாய்? என கேட்கிறார். அதற்கு அந்த நபர் வெகு நேரம் கழித்து, ‘2 முறை’ என பதில் கூறுகிறார்.
பாம்பை கழுத்தில் சுற்றியதால் பயந்த அந்த வாலிபர், கண்களை மூடிக் கொள்கிறார். அப்போது அவரது வாயின் அருகில் பாம்பினைக் கொண்டு செல்கின்றனர். இது போன்று தொடர்ந்து அந்த வாலிபரை சித்ரவதை செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை பலரும் கண்டித்த நிலையில், நடந்த சம்பவத்திற்கு ஜெயவிஜயா தலைமை காவல் அதிகாரி டோனி ஆனந்த ஸ்வாதயா மன்னிப்பு கோரியுள்ளார்.
‘விசாரணை செய்தவர்கள் சரியான முறையை பின்பற்றவில்லை. அவர்கள் பயன்படுத்திய பாம்பு விஷமற்றது. குற்றவாளியின் உடலில் காயம் ஏதும் ஏற்படுத்தவில்லை. மேலும் இந்த விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம்’ என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments: