இங்கிலாந்து திரும்ப விருப்பம் தெரிவித்த ஐ.எஸ். பெண் பயங்கரவாதிக்கு குழந்தை பிறந்தது
இங்கிலாந்து திரும்ப விருப்பம் தெரிவித்த ஐ.எஸ். பெண் ஷமீமா பேகத்திற்கு குழந்தை பிறந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து தலைநகர் கிழக்கு லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் ஷமீமா பேகம் என்ற மாணவி படித்து வந்தார். இணையதளம் மூலம் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட இவர் தனது பள்ளி தோழிகள் 2 பேருடன் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிரியா சென்று ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தார்.
அங்கு அவர் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சிரியாவில் ஐ.எஸ். இயக்கம் தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட நிலையில், ஷமீமா பேகம் அங்குள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்துள்ளார். சமீபத்தில் அவர், தான் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், தனது குழந்தைக்காக லண்டன் திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், திருமணம் முடிந்த குறுகிய காலத்திலேயே எனது கணவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்றும், தனக்கு பிறந்த 2 குழந்தைகளும் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகவும் உருக்கமாக கூறினார்.
ஆனால் ஷமீமா பேகம் நாடு திரும்ப அனுமதி அளிக்க முடியாது என இங்கிலாந்து அரசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அகதிகள் முகாமில் ஷமீமா பேகத்துக்கு குழந்தை பிறந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
No comments: