தனது காதலின் முதல் சந்திப்பை குறித்து மனம் திறக்கும் மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனைவி ஜெயந்தியை முதலில் சந்தித்த விதம் பற்றி வானொலி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தனது இளமை காலத்தில் நடந்த மறக்க முடியாத காதல் சம்பவத்தை விபரித்துள்ளார்.
பொலன்னறுவையில் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றிய போது, பொருட்களை கொள்வனவு செய்ய கொழும்புக்கு வந்து செல்வதுண்டு.
அவ்வாறு வாகனத்தில் பொருட்களை எடுத்துச் செல்லும் வழியில் குருணாகல் பிரதேசத்தில் உள்ள மர ஆலை ஒன்றில் இருந்து பலகைகளை கொள்வனவு செய்வோம். பலகைகளை தெரிவு செய்ய வேறு நபர்கள் வருவார்கள். பலகைகளை பற்றிய அனுபவம் எனக்கில்லை.
ஒரு முறை குருணாகல் பிரதேசத்தில் உள்ள மர ஆலைக்கு அருகில் வாகனத்தை நிறுத்தியிருந்த போது, மூன்று பெண்கள், வெட்டி ஒதுக்கப்பட்ட பலகைகளை சேர்த்து எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு சென்றனர்.
அவர்களில் எனக்கு பிடித்த பெண்ணொருவர் இருந்தார். அவர் தான் ஜெயந்தி. பலகைகளை எடுத்துச் செல்லும் பெண்களிலும் பலகை பாரமாக இருக்கின்றதா என்று கேட்டேன்.
சும்மா இரு என்று கூறி விட்டு அந்த பெண்கள் சென்று விட்டனர். என்னுடன் வாகனத்தில் வந்த சாரதியிடம் அந்த பெண் எந்த வீட்டுக்கு செல்கிறார் என்று போய் பார்க்குமாறு கூறினேன்.
செல்லும் அந்த பெண்ணின் வீட்டை பார்த்தாயா என்று கேட்டேன். அதற்கு சாரதி வீதியோரத்தில் உள்ள வீடுதான் என்று சொன்னார்.
இதன் பின்னர் பொலன்னறுவையில் இருந்து கொழும்பு செல்லும் போது அந்த வீட்டுக்கு அருகில் சென்றதும் நாங்கள் செல்லும் வாகனம் பழுதுப்பட ஆரம்பித்து விட்டது.
பலகை வாங்க சென்ற நான், பின்னாளில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் எனது மனைவி.
27 ஆண்டுகள் தொடர்ந்தும் நாடாளுமன்ற வாழ்க்கை இருந்தது. தற்போது நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கின்றேன்.
இந்த முழு காலத்திலும் நான் அலுவலகத்தில் இருக்கும் போது என் மனைவி, வாழையிலையில் கட்டி அனுப்பி வைக்கும் சாப்பாட்டையே சாப்பிடுவேன்.
தற்போதும் அப்படித்தான். தற்போது முப்பது ஆண்டுகளாக என் மனைவி, வாழையிலையில் அனுப்பி வைக்கும் சாப்பாட்டைதான் சாப்படுகிறேன்.
என் மனைவி எனக்கு தாயை போன்றவர். எனது உடைகளை தயார் செய்வது, உணவுகளை தயார் செய்வது எல்லாம் மனைவி தான்.
நான் வீட்டில் இருந்து புறப்படும் போது எங்கு போகிறீர்கள் என்று என் மனைவி என்னிடம் ஒரு போதும் கேட்டதில்லை. அப்படி கேட்டிருந்தால், நான் இந்த உயரத்திற்கு வந்திருக்க மாட்டேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
No comments: