Header Ads

Header Ads

திருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்!

சரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அதிர்ச்சியையும், கவலை மற்றும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம் என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் இன்றைய தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது,
எமது இந்து மத சகோதரர்களின் மிகவும் பழமைவாய்ந்த சரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்குகின்ற திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் கத்தோலிக்க மக்களால் சேதமாக்கப்பட்ட நிகழ்வு பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள் எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

கத்தோலிக்கர் என்ற வகையில் நாம் வெட்கித் தலைகுனிவதோடு எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.
தமது சிவராத்திரி விழாவை அனுஷ்டிக்கும் தருணத்தில் நடந்த இத்தகாத நிகழ்வினால் மனமுடைந்து காணப்படும் இந்து மத சகோதரர்களுக்கு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்.

எல்லா மதங்களையும் மதத்தவர்களையும் அன்பு செய்ய வேண்டும் மதிக்கவேண்டும் என்றுதான் கத்தோலிக்க திரு அவை எமக்கு போதிக்கின்றது.

இந்நிலையில் இச்செயலை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது, தமிழர்களாகிய நாம் மத வேறுபாடுகளின்றி சகோதரத்துவத்தில் வளர வேண்டியது மிகவும் இன்றியமையாததாக இருக்கும் இந்நிலையில் இப்படியான வேண்டத்தகாத நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாது இருக்கவும் நடைபெற்ற செயலுக்கு பிராயச்சித்தம் செய்யவும் சம்பந்தப்படடவர்கள் முன்வரவேண்டும் என வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

இயேசுவின் வாழ்வாலும் போதனையாலும் நாம் பெற்றுக்கொண்ட அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு, தியாகம், புரிந்துணர்வு, சகோதரத்துவம், குழுமவாழ்வு ஆகிய எமது கத்தோலிக்க மதத்தின் அடையாளங்களை நாம் இழந்துவிடாமல் பாதுகாப்போம்.

இப்படியான நிகழ்வுகளால் எமது கத்தோலிக்க மதத்தின் பரிசுத்த தனத்துக்கு ஏற்படும் களங்கங்களுக்காக நாம் மனம் வருந்தி பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

தவிர்க்க முடியாத காரணங்களால் மதங்களுக்கிடையே அவ்வப்போது ஏதாவது கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பட்சத்தில் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகள் மூலமாக அவற்றை தீர்த்து வைக்க முயற்சி செய்ய வேண்டுமேயொழிய வன்முறைகளிலும் அடாவடித்தனங்களிலும் ஈடுபடவே கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.