சிங்கப்பூரில் ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 120 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து, சிங்கப்பூரில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச நோய்த்தொற்று எண்ணிக்கை இதுவே ஆகும்.
சீனாவுக்கு வெளியே பிப்ரவரி மாதத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவியதை உறுதிசெய்த முதல் நாடு சிங்கப்பூர் ஆகும். ஆனால், கடுமையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிகளவிலான பரிசோதனைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக நோய்த்தொற்று பரவலை சிங்கப்பூர் கட்டுக்குள் கொண்டுவந்தது.
ஆனால், மார்ச் மாதம் வைரஸ் பரவலின் இரண்டாவது கட்டத்தில் ஆசிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. அப்போது வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் நோய்த்தொற்று பரவுவதற்கு காரணமாக இருந்தனர்.
அதிகளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இரண்டு மிகப் பெரிய முகாம்களில் 20,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள 120 பேரில் 116 பேருக்கு சமூக பரவலின் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டது எனவும் இனி வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படும் எனவும் சிங்கப்பூர் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள மூன்று லட்சம் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலானோர் கட்டுமானத்துறையில் பணிபுரிகின்றனர்.
No comments: