கொரோனா வைரஸ்: சீனாவில் நடப்பது என்ன?
உலகையே முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 20 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 19 ஆயிரமாக உள்ளது. ஏறத்தாழ 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட சீனாவில், நேற்று புதிதாக 89 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. யாரும் மரணமடையவில்லை. இதில் 76 பேர் ரஷ்யாவிலிருந்து சீனா வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று முன் தினம் 108-ஆக இருந்தது.
சீனாவின் குவாங்சு மாகாணத்தில் தங்கியிருந்த ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த 111 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்குள்ள ஆப்ரிக்க மக்கள் அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அனைத்து வெளிநாட்டினரையும் சமமாக மதிப்பதாக குவாங்சு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள 2 மருந்துகளை மனிதர்கள் மீது சோதித்துப் பார்க்க உள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் 70 தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றில் 3 மருந்துகள் மனிதர்கள் மீது சோதிக்கும் நிலையை அடைந்துள்ளன. இதில் இரண்டு மருந்துகள் அமெரிக்காவிலும், ஒரு மருந்து சீனாவிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
No comments: