Header Ads

Header Ads

அமெரிக்காவில் பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல்

நியூயார்க்கின் பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்காவில் 4 வயதான பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடியா என்ற பெண் புலியே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் வன விலங்கு என்று கூறப்படுகிறது.
லோவாவில் உள்ள தேசிய விலங்குகள் ஆராய்ச்சி மையம் நாடியா என்ற புலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது என்று பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்காவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த மாதத்தின் பிற்பகுதியில், விலங்குகள் இருமலால் பாதிக்கப்பட்டிருந்ததாக வன விலங்கு பாதுகாவலர் ஒருவர் குறிப்பிடுகிறார். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பின் பல அறிகுறிகள் இந்த விலங்குகளிடம் தென்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
''உலகிலேயே முதல் முறையாக மனிதரிடம் இருந்து விலங்குக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இப்போது தான் கேள்விப்படுகிறோம்'' என வன விலங்கு பூங்காவின் தலைமை அதிகாரி பால் கேலி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 பரவுவதைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பிற உயிரியல் பூங்காக்கள் மற்றும் நிறுவனங்களுடன் இந்த புலிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்துப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.
நாடியாவின் சகோதரியான அசூல் மற்றும் இரண்டு ஆமூர் புலிகள், மூன்று ஆஃப்ரிக்க சிங்கங்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு குறித்து அறிகுறிகள் தெரிவதாக வன விலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படும் ஆறு விலங்குகளுக்கும் உடல் நலம் மெலிந்து காணப்படுவதாகவும் சரியான உணவு சாப்பிடுவதில்லை என்றும் கூறுகின்றனர். இதுவரை வேறு எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
விலங்குகளில் புலி மற்றும் சிங்கம் இவ்வகையான புதிய வைரஸ்களால் எப்படி பாதிக்கப்படும் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்கவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Powered by Blogger.