பிரான்சில் புலம்பெயர் மாணவிகள் தொடர் சாதனை!
பிரான்ஸ் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் (டீ.யு) பட்டப்படிப்பிற்காக நடைபெற்ற நுழைவுத்தேர்வில் சஜீர்த்தனா நேசராசா என்ற புலம்பெயர் மாணவி சாதனை படைத்துள்ளார்.
தேர்வுகள் நேற்று முன்தினம்(20) நடைபெற்றுள்ளதுடன், இணையவழித் தேர்வில் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
வன்னி பெருநிலப்பரப்பைப் பூர்வீகமாகக் கொண்டு போர்ச் சூழல் காரணமாக புலம்பெயர்ந்து வாழ்ந்த சஜீர்த்தனா நேசராசாவின் சாதனை பெருமைக்குரியதாகக் கருதப்படுகின்றது.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடத்தப்படும் பட்டப்படிப்பில, பிரான்சில் பிறந்து தமிழ்ச் சோலைப் பள்ளிகளில் தமிழில் 12 வரை நிறைவு செய்த மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர்.குறித்த தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பு கடந்த நான்கு வருடங்களாக நடந்து வருகிறது.
இதேவேளை, புலம்பெயர் மண்ணில் பிறந்த மாணவிகள்தான் தொடர்ந்தும் சாதனை படைத்துவருகின்றனர்.
கடந்த 2016 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் பரமேஸ்வரன் சுசானி , எழுத்துப் பகுதி மற்றும் இணைய வழி வினாக்கள் என இரண்டு பகுதிக்கும் மொத்தமாக 96 புள்ளிகள் பெற்றுள்ளார்.
2015 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் தட்சாயணி தங்கத்துரை இணைய வழித் தேர்வில் 100 புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்து இரண்டு தொகுதி மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளதுடன் தொடர்ந்தும் புலம்பெயர் மண்ணில் பிறந்த மாணவிகள் சாதனைப் படைத்து வருவது பெருமைக்குரியதாகக் கருதப்படுகின்றது.
No comments: