அமெரிக்கப் படையினருக்கான மயானமாக ஆப்கானிஸ்தான் மாறும்' தலிபான் மிரட்டல் .!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தொடர்ந்து போரில் ஈடுபடப் போவதாக சூளுரைத்துள்ளார். இராணுவ கட்டளைத் தலைவராக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை அவர் ஆற்றிய முதலாவது உரையின் போதே இவ்வாறு சூளுரைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 16 வருட காலமாக அமெரிக்கப் படையினர் நிலைகொண்டிருந்த நிலையில் அந்நாட்டிலிருந்து அந்தப் படையினரை விரைவாக வாபஸ் பெறுவதால் ஏற்படக்கூடிய ஏற்றுக் கொள்ள முடியாத விளைவுகளை தவிர்க்க அந்நாட்டில் அமெரிக்கா தொடர்ந்து போ ரில் ஈடுபட வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். அமெரிக்கப் படையினரை வாபஸ் பெறுவதால் ஏற்படக் கூடிய இடைவெளியை அல்–கொய்தா, ஐ.எஸ். தீவிரவாத குழு உள்ளடங்கலான தீவிரவாத குழுக்கள் நிரப்ப முயற்சிக்கலாம் என அவர் பதவியேற்றது முதற் கொண்டு தெரிவித்து வருகிறார்.
ஆப்கானிஸ்தானிலும் எல்லைப் பிராந்தியத்திலும் நாம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல் பாரியதாகவுள்ளது” என்று அவர் கூறினார். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் உதவி வெற்றுக் காசோலையாக அமையாது எனத் தெரிவித்த அவர், தான் தூர நாடுகளுக்கு ஜனநாயகத்தை கட்டியெழுப்பவும் அமெரிக்காவின் சொந்த பிரதிமையில் ஜனநாயகத்தைக் ஏற்படுத்தவும் படையினரை அங்கு அனுப்பப் போவதில்லை எனவும் எச்சரித்துள்ளார். “நாங்கள் நாட்டை மீளவும் கட்டியெழுப்பப் போவதில்லை.
நாம் தீவிரவாதிகளை கொல்லப் போகிறோம்" என அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தனது இந்த உரையில் ஆப்கானுக்கு மேலதிகமாக எத்தனை அமெரிக்கப் படையினர் அனுப்பப்படவுள்ளனர் என்ற தகவலை வெளியிடவில்லை. ஆனால் அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் ஆப்கானுக்கு 4,000 படையினரை அனுப்பிவைக்க சிபாரிசு செய்துள்ளது. இந்நிலையில் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு வரும் அமெரிக்கப் படையினருக்கு அந்நாடு ஒரு மயானமாக அமையும் என நேற்று செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளனர்.
அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படையினரை வாபஸ் பெறாவிட்டால் இந்த நூற்றாண்டின் அதிகார சக்தியாகவுள்ள அந்நாட்டிற்கு ஆப்கானிஸ்தான் பிறிதொரு மயான பூமியாக மாறும்" என தலிபான் தீவிரவாதக்குழுவின் பேச்சாளர் ஸபியுல்லாஹ் முஜாஹித் எச்சரித்துள்ளார். அமெரிக்கா போரைத் தொடர்வதை விடுத்து வெளியேறும் தந்திரோபாயம் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments: