தந்தையின் நண்பரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
கேரளாவில் 15 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த தந்தையின் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அயர்குன்னம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் கிடைக்கவில்லை. இதனால் அயர்குன்னம் போலீசில் அந்த சிறுமியின் தந்தை புகார் செய்தார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினார்கள்.
அந்த சிறுமியின் செல்போன் நம்பர் மூலம் போலீசார் விசாரணை நடத்தியபோது அதே பகுதியைச் சேர்ந்த அஜேஸ் (வயது 35) என்பவர் போலீசார் பிடியில் சிக்கினார். இவர் அந்த பகுதியில் ஹாலோ பிளாக் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
மாயமான சிறுமியை அவர் கற்பழித்து கொலை செய்து விட்டு பிணத்தை புதைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த சிறுமியின் தந்தையின் நண்பரான அஜேஸ் அடிக்கடி அவர்களது வீட்டுக்கு சென்றதன் மூலம் அந்த சிறுமிக்கு பழக்கமாகி உள்ளார். சம்பவத்தன்று அந்த சிறுமியை அஜேஸ் ஏமாற்றி ஹாலோ பிளாக் நிறுவனம் அருகே தான் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த சிறுமியை கற்பழித்தார். பின்னர் சிறுமியை கழுத்தை சுடிதார் துப்பட்டாவால் நெரித்து கொலை செய்துள்ளார். பிணத்தை அந்த பகுதியிலேயே குழி தோண்டி புதைத்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அஜேசை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தன்னை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று அஜேஸ் போலீசில் கூறி உள்ளார். இருந்தாலும் அவருக்கு உடந்தையாக யாரும் இருந்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments: