மைத்திரியின் அரசியல் சூழ்ச்சி இதுதான்
2019 ஆம் ஆண்டுக்குரிய முதலாவது பரபரப்பான வாரத்துக்குள் இலங்கைத்தீவின் அரசியல்களம் இன்று புகுந்து கொண்டது. இந்த ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு, நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று சில முக்கியநகர்வுகள் இடம்பெற்றன. இந்த நகர்வுகளில் வட மாகாணத்துக்குரிய புதிய ஆளுனர் நியமனமும் அடக்கம். சுரேன்ராகவன் ஒரு தமிழர் என்பதே இங்கு முக்கிய விடயம்.
இவ்வளவுகாலம் வடக்கின் ஆளுனர்களாக மிடுக்குமிக்க சிறிலங்காவின் முன்னாள் சீருடைமுகங்களையும் ரெஜினோல்ட் குரே போன்ற தெமிழ்பேசும் முகத்தையுமே வடமாகாண அரசியல் பரப்பு கண்டிருந்தது.
அவ்வாறான இடத்தில் கலாநிதி சுரேன் ராகவனின் கைகளில் வடக்கின் ஆளுனர் பொறுப்பை மைத்திரி வழங்கியிருப்பது புதுசு கண்ணா புதிசு பாணியிலானது.
ஆனால் தனது ஜனாதிபதி ஊடக பணிப்பாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றிய முன்னாள் பல்கலைக்கழகவிரிவுரையாளரான சுரேன்ராகவனை வடக்கின் ஆளுனர் பொறுப்புக்கு தெரிந்தெடுத்த மைத்திரியின் நகர்வு பொத்தாம் பொதுவானது அல்ல.
ஏற்கனவே கடந்த வெள்ளியன்று கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக தமிழ்பேசும் ஹிஸ்புல்லாவை நியமித்து தமிழ்மக்களுக்கு ஒரு தனித்துவ செய்தியை மைத்திரி சொல்லியிருப்பதை இங்கு நினைவுபடுத்தவேண்டும்
இப்போது ஆளுனர் சுரேன்ராகவன் மூலம் இன்னொரு உபரிச்செய்தியை வடக்குக்குச் சொல்லியுள்ளார் மைத்திரி
ஆகமொத்தம் தோதல் ஆண்டில் தனக்குச்சார்பாக பணியாற்றக்கூடியவர்களை அல்லது தோதானவர்களை வடக்கு மற்றும் கிழக்கில் ஆளுனர்களாக நியமித்ததன் ஊடாக தமிழர்களை மையப்படுத்திய மைத்திரியின் பலே பலே அரசியல் வெளிப்படுகிறது
பாவம் ரெஜினோல்ட்குரே வடமாணசபையின் ஆட்சிக்காலம் முடிந்தவுடன் மனுசன் புலம்பெயர் நாடுகள் வரை ஓடோடிச்சென்று தனது நல்லிணக்க அரசியல் ஊடாக கொழும்புக்கு ஒரு செய்தியை சொல்லமுனைந்தார். ஆயினும்; இறுதியில் ஆளுனர் பதவியில் இருந்து கழற்றப்பட்டு கடாசப்பட்டார்.
இந்தநிலையில் தெற்;கின் அரசியல் களத்தில் மைத்திரியுடன் அதிகம் முரண்படாவண்ணம் ஒலிவ் கிளைகளை காவியபடி தந்ரோபாய ரீதியில் அரசியல செய்யும் ரணில்தரப்பின் பாணியையும் இங்கு அவதானிக்கவேண்டும்.
காலம் கனியும் வரையில் காத்திருந்து அடிக்க காத்திருக்கும் ரணிலின் குயுக்தி முளைச்செயற்பாடு சிறிலங்காவின் அமைச்சரவை மற்றும் அரசியலமைப்பு பேரவை ஆகியவற்றை மையப்படுத்தி ரணில் தனது தந்ரோபாய ஒலிவ் கிளை அரசியலை நகர்த்த முனைகிறார்.
மைத்திரி தலைமையில் இன்றைய அமைச்சரவை கூட்டம் இடம்பெற முன்னர் நேற்று தனது அமைச்சரவை தளபதிகளுடன் சிறப்புக்கூட்டமொன்றை நடத்திய ரணில் தற்போதைக்கு மைத்திரி தரப்புடன் அதிகம் முரண்படக்கூடாது எற்ற மந்திரத்தை தனது அமைச்சக தளபதிகளுக்கு ஓதியிருப்பதாகத்தெரிகிறது.
குறிப்பாக கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள் உட்பட்ட அரச நிறுவனங்களுக்கு, தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படும் விடயத்தில் மைத்திரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்துக்கு மதிப்பளிக்கவேண்டும் என்ற மந்திரத்தை ரணில் சொல்லியிருக்கின்றார்.
முன்னதாக தனது செயலாளர் வெளியிட்;ட சுற்றுநிரூபத்தின்படிதான் கண்டிப்பான மேற்படி நியமனங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கறாரான பணிப்புரை ஒன்றை சகல அமைச்சுகளின் செயலாளர்களுக்கு கடந்தவாரம் மைத்திரி வெளியிட்டார். ஆனால் மைத்திரியின் இந்தப்பணிப்புரைக்கு எதிராக சிலஅமைச்சர்கள் கொடிபிடிக்க ஆயத்தமாகிய நிலையில் அதனை தனது அங்;குசத்தால் பாகனான ரணில் அடக்கினார்.
இதேபோல ரணில் தரப்பிலிருந்து வெளிப்பட்ட இன்னொரு ஒலிவ்கிளை நீட்டல் நகர்வை சிறிலங்காவின் அரசியலமைப்பு பேரவையிலும் காணமுடிந்தது.
குறிப்பாக சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் உட்பட்ட நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக மைத்திரி முன்வைத்த பரிந்துரைகளை அரசியலமைப்பு பேரவை இன்று ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
முன்னைய நிலவரங்களின் படி உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கு அரசியலமைப்புப்பேரவை பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்களை மைத்திரி சட்டென ஏற்றுக்கொள்ளவில்லை.
இதற்கு மாறாக இரண்டு நீதிபதிகளின் பெயர்களை தானே முன்மொழிந்த இடைச்செருகலைச்செய்தார். இவ்வாறான நகர்வுகள்யாவும் அந்த 52 நாள் குழப்பங்களுக்கு முன்னர் செய்யப்பட்டது. சிறிலங்கா அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தப்படி அரசியலமைப்புப் பேரவை ஒருவரை இவ்வாறான நியமனங்களுக்குப் பரிந்துரைத்தால் அவ்வாறன நியமனத்தை வழங்காமல் அரசதலைவரால் இருக்கமுடியாது.
ஆயினும் நாட்டின் அரசியலமைப்புக்குக்கடுக்காய் கொடுத்து 75 நாட்கள் கடந்தும் நீதிபதிகளுக்குரிய நியமனங்களை வழங்காமல் மைத்திரி காலத்தை இழுத்தடித்தார்.இதற்கிடையே உச்சநீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தரவும் கடந்தமாதம் ஓய்வுபெற்றார். இதனால் அவருடைய இடத்துக்கும் புதிய நீதிபதியொருவரை நியமிக்க வேண்டிய நிலையெழுந்தது.
இந்தநிலையில் இந்தவிடயத்திலும் இன்னொரு ஒலிவ்கிளையை இப்போது அரசியலமைப்பு பேரவை நீட்டியுள்ளது. குறித்துபாக மைத்திரி முன்வைத்த பரிந்துரைகளை அரசியலமைப்புபேரவை தற்போது ஏற்றுக்கொண்டிருப்பதாகத்தெரிகிறது.
இந்த நகர்வுகள் இடம்பெற்ற நிலையில் மகிந்தவை பிரதமதராக கொலுவேற்றிய 52 நாள் குழப்பங்களை மையப்படுத்தி மைத்திரிக்கு மனநலக்கோளாறு என்ற புள்ளியை மையப்படுத்தி பரபரப்பான வழக்கு ஒன்றை தாக்கல் செய்த பெண் அதே வழக்கால் தனது கைகளை சுட்டுக்கொண்டார்.
தக்சீலா லக்மாலி ஜெயவர்த்தனா என்ற இந்தப்பெண்தாக்கல் செய்த மனுவை இன்று நிராகரித்த சிறில்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறான ஒரு வழக்கைதாக்கல் செய்த குற்றத்துக்காக ஒரு இலட்சம் ரூபா அபராதப்பணத்தை செலுத்துமாறு அவருக்கே உத்தரவிட்டுள்ளது
சரி இப்போது மைத்திரியை மையப்படுத்தி ரணில் தனது தந்ரோபாய ஒலிவ் கிளைகளை நீட்டுகின்றார். அப்படியானால் ரணிலுக்கு பலமாக முண்டுகொடுத்த தமிழ்தேசியக்கூட்டமைப்பிடம் இதுசார்ந்து எவ்வாறான தாக்கங்களை எதிர்பார்க்கக்கூடும்?
கூட்டமைப்பும் தனது கொதிநிலையை தணிக்கும் அறிகுறிகளை காட்டுகிறது அந்தவகையில் இரா. சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர் என்ற விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருந்த கூட்டமைப்பு இப்போது வேறுவழியின்றி அந்த நிலைப்பாட்டைத் தளர்த்துவது போலத்தெரிகிறது.
ஏற்கனவே மைத்திரியின் வடக்கு கிழக்கு ஆளுனர்நியமன அரசியல்கண்டு கூட்டமைப்பு கொஞ்சம் அதிர்ந்துள்ளது. வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் அது தெரிகின்றது. இந்த நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்ததான் என்பதை சபாநாயகர் கருஜயசூரிய மீண்டும் கட்சிகளிடம் உறுதிப்படுத்தியிருப்பது கூட்டமைப்புக்கு உவப்பான செய்தியல்ல. ஆகையால் இனிமேல் இரா. சம்பந்தனுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்ற வாதத்தில் தன்னால் தொடர்ந்து முட்டிமோதிவெல்லமுடியாது என்பதை கூட்டமைப்பும் உணர்ந்திருக்கக்கூடும்.
எது எப்படியோ நாளை 2019இன் முதல் அமர்வாக நாடாளுமன்றம் கூடியபின்னர் எதிர்க்கட்சித்தலைவர் யார் என்பதை சபாநாயகர் அதிகாரபூர்வமாக சபையில் அறிவித்தபின்னர் இந்தவிடயத்தில் இரா.சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர்தணிவு நிலைக்கு வரக்கூடும் எதற்கும் நாளை வரை பொறுத்திருக்கலாம்.
No comments: