ரஷிய அதிபர் புதினுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததா?
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியதாக வெளியான செய்தி குறித்து டிரம்ப் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த 2 ஆண்டுகளில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு தொடர்பான தகவல்களை தனது நிர்வாகத்திடம் மூடி மறைத்துவிட்டதாகவும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு டிரம்ப் பேட்டி அளித்த போது அவரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:-
அது ஒரு சிறப்பான பேச்சுவார்த்தை நான் எதையும் உள்ளே வைத்து மூடி மறைக்கவில்லை. நான் அனைத்து நாடுகளின் தலைவர்களிடமும் தனியாக தான் பேச்சுவார்த்தை நடத்துவேன். பிரதிநிதிகள் யாரும் உடன் இருக்கமாட்டார்கள். அது பற்றி யாரும், எதுவும் கூறியது கிடையாது. ரஷியாவுடன் எந்த வித கூட்டணியும் இல்லை என்பதை அனைவரும் அறிவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments: