நண்பரை கொன்று உடலை ஆட்டுக்கறி போல நறுக்கிய கொடூரம்
பங்குதரகர் ஒருவர், பணப்பிரச்சினையில் நண்பரை கொலை செய்து உடலை ஆட்டுக்கறி போல நறுக்கிய கொடூர சம்பவம் விராரில் நடந்துள்ளது.
நெஞ்சை பதறச்செய்யும் இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
பால்கர் மாவட்டம் விரார் மேற்கு எவர்சைன் அவென்யூ பகுதியில் பச்ராஜ் பாரடைஸ் என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது. குடியிருப்புவாசிகள் விலங்குகள் ஏதாவது அருகில் செத்து கிடக்கும் என கருதினர்.
இந்தநிலையில், கட்டிடத்தில் உள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. மேலும் துர்நாற்றம் அதிகமானது. இதுபற்றி குடியிருப்புவாசிகள் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். அடைப்பை சரி செய்வதற்காக தொழிலாளர்கள் வந்து அங்குள்ள கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்தனர்.
அப்போது, கழிவுநீரில் 3 மனித விரல் துண்டுகள் மிதந்து கொண்டு இருந்தன. இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அர்னாலா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த விரல்களை கைப்பற்றினர்.
இதற்கிடையே கழிவு நீர் குழாய்க்குள் அதிகளவில் மனித உடல் பாகங்கள் துண்டு, துண்டாக சிக்கியிருந்தது. மேலும் அங்குள்ள சாக்கடையிலும் மனித உடல் பாகங்கள் மிதந்து கொண்டிருந்தன. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த உடல் பாகங்களையும் போலீசார் கைப் பற்றினர்.
150-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் 40 கிலோவுக்கும் மேல் எடை கொண்டதாக இருந்தன.
கைப்பற்றப்பட்ட உடல் பாகங்கள் கலினாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் குடியிருப்புவாசிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இந்தநிலையில், மனித உடல் பாகங்கள் பச்ராஜ் பாரடைஸ் கட்டிடத்தின் 6-வது மாடியில் உள்ள 602-ம் எண் வீட்டில் உள்ள கழிவுநீர் குழாய் வழியாக போடப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த வீட்டை மும்பை சாந்தாகுருஸ் வகோலாவை சேர்ந்த பிண்டு சர்மா(வயது42) என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதன் விவரம் வருமாறு:-
பிண்டு சர்மா பங்கு தரகராக உள்ளார். இவரது நண்பர் கணேஷ் கோலட்கர்(58). இவர் தானே மாவட்டம் மிராரோட்டில் வசித்து வந்தார். அச்சகம் நடத்தி வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன் பிண்டு சர்மாவிடம் கடனாக ரூ.1 லட்சம் வாங்கியிருந்தார். அதில், ரூ.40 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். மீதி 60 ஆயிரத்தை கொடுக்கவில்லை. அந்த பணத்தை கேட்டு அவர், கணேஷ் கோலட்கரை தொந்தரவு செய்து வந்தார்.
இருப்பினும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி விராரில் தான் வாடகைக்கு எடுத்து இருக்கும் வீட்டை பார்த்து வருவோம் என கூறி பிண்டு சர்மா, கணேஷ் கோலட்கரை வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து இருவருக்கும் இடையே கடன் தொடர்பாக தகராறு உண்டானது. அப்போது, கணேஷ் கோலட்கரை பிடித்து பிண்டு சர்மா தள்ளிவிட்டுள்ளார். இதில், தரையில் மோதியதில் தலையில் படுகாயம் அடைந்த கணேஷ் கோலட்கர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதைப்பார்த்து பிண்டு சர்மா அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.
பின்னர் நடந்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் உடலை வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு சாந்தாகுருஸ் திரும்பினார். மறுநாள் புதிய ஆக்சாபிளேடு ஒன்றை வாங்கிக்கொண்டு விராருக்கு சென்ற அவர், வீட்டுக்குள் இருந்தபடி கணேஷ் கோலட்கரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டார்.
அதை வெளியில் எடுத்து சென்றால் யாரும் பார்த்து விடுவார்களோ என பயந்துபோன அவர், ஆட்டுக்கறியை நறுக்குவது போல் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கினார்.
பின்னர் அந்த துண்டுகளை கழிவறை கோப்பைக்குள் கொட்டினார். எஞ்சியிருந்த துண்டுகளை கழிவுநீர் குழாய்க்குள் போட்டு தண்ணீரை ஊற்றினார். இதில், அந்த உடல் துண்டுகள் அடைத்துக்கொண்டன.
இனி மற்ற உடல் பாகங்களை அங்கு போட முடியாது என தெரிந்ததும் அவர் ஒரு பையில் மூட்டைக்கட்டி கட்டிடம் அருகே உள்ள சாக்கடையில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் சென்று விட்டார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தன.
இதையடுத்து போலீசார் பிண்டு சர்மாவை அதிரடியாக கைது செய்தனர்.
கணேஷ் கோலட்கரின் தலையை இன்னும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தலையையும் சாக்கடையில் தான் வீசியதாக பிண்டு சர்மா போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்.
அவர் ஒருவராக உடலை துண்டு, துண்டாக்கி நறுக்கி வீசியிருக்க முடியாமா? என போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. எனவே இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணப்பிரச்சினையில் நண்பரை கொன்று உடலை கூறுப்போட்டு வீசிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments: