காதலியுடன் குடும்பம் நடத்திய வாலிபர் எரித்துக்கொலை
நாமக்கல் அருகே காதலியுடன் குடும்பம் நடத்திய வாலிபரை பெண்ணின் உறவினர்கள் எரித்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி பொன்னேரி பகுதியில் வசித்து வருபவர் பெரியண்ணன். இவரது மகன் குமரேசன் (வயது 25). பி.காம் பட்டதாரி.
இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வீடுகளுக்கு கடன் வாங்கி கொடுக்கும் வேலை செய்து வந்தார். கடந்த 31-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்ற குமரேசன் அதன் பிறகு விட்டிற்கு திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் கன்னிமார் கோவில் வளைவு அருகே இரட்டை குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால் முட்செடிகள் வளர்ந்து குளமே தெரியாத படி காணப்படுகிறது.
இந்த அடர்ந்த முட்செடிகளுக்குள் குமரேசன் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவருடைய உடலில் பாதி அளவிற்கு தீயில் எரிந்து இருந்தது. அவரை தீயில் எரித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் என்பது எருமபட்டி போலீசாருக்கு தெரியவந்தது.
ஏன்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-
குமரேசனுடைய பெற்றோர் பொன்னேரி பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்கள். பெற்றோருடன் ஆரம்பத்தில் வசித்து அவர் நிதி நிறுவனத்தின் மூலம் அதிகமாக வருமான கிடைக்க தொடங்கியதை தொடர்ந்து தனியாக வீடு எடுத்து ஆடம்பரமாக வாழ முடிவு செய்தார். அதன்படி குமரேசன் அதே பகுதியில் தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அங்கு ஆடம்பரமாக வசித்து வசித்து வந்தார். பெற்றோர் தங்களுடன் வசிக்குமாறு பலமுறைகூறியும் அவர் கேட்கவில்லை.
இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் இருந்து பணம் கடன் வாங்கி கொடுக்கும் பணியின்போது ஒரு பெண்ணுடன் குமரேசனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்து ஜாலியாக இருந்து வந்தனர்.
கடந்த மாதம் 20-ந்தேதிக்கு பிறகு குமரேசன் தனது காதலியை பொன்னேரியில் தனியாக வசித்து வரும் வாடகை வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினார். அந்த பெண் 4 நாட்கள் அவருடன் தங்கியிருந்தார்.
அப்போது சந்தோசமாக குடும்பம் நடத்திய அவர்களுக்குள் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனம் உடைந்த இருவரும் மன நிம்மதிக்க கோவிலுக்கு போக முடிவு செய்தனர். இதற்காக குமரேசன் தனது மோட்டார் சைக்கிளில் காதலியை அழைத்துக் கொண்டு முத்துக்காப்பட்டி பெரியசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு இருவரும் சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு திரும்பினர்.
அப்போது காதலியின் உறவினர்கள் அங்கு வந்து குமரேசனை அடித்து உதைத்து அவரிடம் இருந்த மோட்டார்சைக்கிளையும், செல்போனையும் பிடுங்கினர். மேலும் அவரை அடித்து உதைத்து அங்கிருந்து விரட்டி விட்டு காதலியை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். காயம் அடைந்த குமரேசன் தட்டுதடுமாறி நடந்து நள்ளிரவில் வீட்டிற்கு வந்தார்.
மறுநாள் காலையில் காதலியை உடன் அழைத்துக் கொண்டு குமரேசன் தங்கியிருக்கும் வாடகை வீட்டிற்கு உறவினர்கள் வந்து, அங்கு அந்த பெண் வைத்திருந்த கைப்பை, துணிமணிகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சென்றனர். இதனால் காதலன் குமரேசன் மனம் உடைந்தார்.
இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரை காதலியின் உறவினர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கி உயிருடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேதிக்கப்படுகிறது.
குமரேசனும், அந்த பெண்ணும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவராக இருக்கலாம். இதனால் அவரை காதலியின் உறவினர்கள் திட்டுமிட்டு கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் கருதப்படுகிறது.
ஆகவே அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? மற்றும் கொலை செய்த நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments: