கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கியது!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,500-யும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டி இருப்பதால், இந்த நோய் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க அரசு ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறது. இதற்கான ஆணையில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.
அதன்பிறகு வெள்ளை மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் இந்த நோய்க்கிருமி மேலும் பரவுவதை கட்டுப்படுத்துவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்கவும் எனது நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்துகிறோம். இந்த அளவுக்கு எந்த நாட்டிலும் நடத்தப்படுவது இல்லை.
அமெரிக்க ராணுவத்தில் உள்ள பொறியியல் பிரிவின் சார்பில் நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளை கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலம் வென்டிலேட்டர்களை (உயிர்காக்கும் சுவாச கருவி) தயாரிக்க முடிவு செய்து இருக்கிறோம். எனவே அடுத்த 100 நாட்களில் அரசுக்கு கூடுதலாக 1 லட்சம் வென்டிலேட்டர்கள் கிடைக்கும்.
கொரோனாவை ஒழிக்க பொருளாதாரம், விஞ்ஞானம், மருத்துவம், ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு என எங்களிடம் உள்ள அனைத்து சக்திகளையும் பயன்படுத்துவோம்.
கொரோனாவை ஒழிக்க நிதி உதவி கிடைக்க வகை செய்யும் மசோதா செனட் சபையில் எந்தவித எதிர்ப்பும் இன்றி 96 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேறி இருக்கிறது. இது இதற்கு முன் எப்போதும் இல்லாதது ஆகும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
வென்டிலேட்டர்கள் தயாரிப்பது தொடர்பாக ஜெனரல் எலெக்டிரிக்ஸ், பிலிப்ஸ், மெட்ரானிக், ஹாமில்டன், சோல், ரெட்மெட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் மேற்கொள்ள இருக்கிறது.
போயிங் நிறுவனம் மருத்துவ பணியாளர்களுக்கு பயன்படும் முக கவசங்களை தயாரித்து வழங்க முன் வந்து இருப்பதோடு, மருத்துவ சாதனங்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல தனது சரக்கு விமானங்களை வழங்க இருக்கிறது.
No comments: