Header Ads

Header Ads

கேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார்

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும். தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான கேணல் ஜெயம் அண்ணாவின் தாயார் சற்று முன்னர் லண்டனில் காலமானார் என அதிர்வு இணையம் அறிகிறது. லண்டனை கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கும் இன் நிலையில் அவரை வைத்தியசாலையில் போதுமான அளவு கவனிக்கவில்லை போல் உள்ளது. இல்லையென்றால் இத்தனை விரைவாக அவர் விடைபெற்று இருக்கமாட்டார்.
விடுதலைப் புலிகள் வன்னியில் பலமாக இருந்த கால கட்டமானாலும் சரி, அவர்கள் போரிட்ட காலமாக இருந்தாலும் சரி, கேணல் ஜெயம் என்றால் சிங்களப் படைகள் மட்டும் அல்ல, இந்திய ராணுவம் கூட கிடு நடுங்கும். ஜெயம் அண்ணாவின் தந்தையை, EPDP ஒட்டுக் குழுவினர் இழுத்துச் சென்று, அவரை அடித்துக் கொலை செய்து வன்னியில் உள்ள பாடசாலை ஒன்றின் கழிவறைக் கிடங்கில் போட்டு மூடினார்கள்.
அன்றைய நிலையில் கூட சற்றும் மனம் தளராத தாயார், தனது கணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னராவது தரும்படி கேட்டு போராடினார். அது மட்டுமா ? 1989ல் ஜெயம் அண்ணாவின் தந்தையின் சகோதரரையும் அழைத்துச் சென்று இதுபோலவே அடித்துக் கொலை செய்தார்கள். அன்றும் உறுதியாக நின்றிருந்தார் அம்மா. இப்படி கேணல் ஜெயம் அண்ணாவின் குடும்பத்தாரை சிங்களம், இந்திய ராணுவம் மற்றும் ஒட்டுக் குழுக்கள் கூறுபோட்டார்கள். எதிலும் அவர் மனம் தளரவில்லை. வீரனைப் பெற்ற தாய் அல்லவா.. வீழ்ந்துவிடுவாரா ?
அதன் பின்னர் பல வருடம் கழித்தே அவர் லண்டனில் வந்து தங்கியிருந்தார். எந்த மாவீரர் தினத்தையும் அவர் காணத் தவறுவதே இல்லை. அவரைக் கண்டாலே என் கண்கள் ஏனோ தெரியவில்லை குழம் ஆகிவிடும். காரணம் என்னவென்றால் சமாதான காலத்தில் கேணல் ஜெயம் அண்ணா சில தடவை நோர்வே வந்து சென்றிருக்கிறார். நானும் அங்கே அவருடன் நாட்களை கழித்திருக்கிறேன். ஒன்றாக சாப்பிட்டு. அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொடுத்து. தீராத தாகத்தோடு போராடியவர்களை. உணவு கொடுத்தாவது திருப்த்திப் படுத்த முனைந்திருக்கிறேன். அந்த நாட்கள் பசுமையானவை.
2009ல் முள்ளிவாய்க்காலை சிங்கள ராணுவம் நெருங்கிய வேளை சிறிதளவேனும் அச்சமின்றி போராடி, குண்டுகள் தீர்ந்துவிட்ட நிலையில் தன்னை தானே மாய்த்துக் கொண்ட வீரநாயகன் கேணல் ஜெயம் அண்ணா. கேணல் ஜெயம் என்று அவர் அழைக்கப்பட்டாலும். உண்மையில் அவரை இறுதி கட்டத்தில் பிரிகேடியர் ஜெயம் என்றே  அழைத்தார்கள். அதற்கான அங்கிகாரம் தலைவரால் வழங்கப்பட்டும் இருந்தது. அவருக்கு 2 பிள்ளைகள்  உள்ளனர். அவரது அம்மா இறையடி எய்தியுள்ளார். (இல்லை மகன் இருக்கும் இடம் சென்றுவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்). இன் நேரத்தில், அவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல ஒட்டுமொத்த தமிழ் இனமே உள்ளது என்று கூறி விடைபெறுகிறேன். அன்னாரின் ஆத்மசாந்திக்காய் நாமும் பிரார்த்திப்போமாக.

No comments:

Powered by Blogger.