அமெரிக்காவில் தொடரும் ஆயிரக்காணக்கான மரணங்கள்: மொத்த மரணம் 75 ஆயிரத்தை நெருங்கியது!
உலகம் முழுவதும் மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் வீரியத் தாக்கம் இன்னும் குறைவதாகத் தெரியவில்லை.
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலி மற்றும் ஸ்பெய்னில் சற்றுக்குறைந்த போக்கை காணக்கூடியதாக உள்ளபோதும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் சிறிய பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்த சில நாடுகளில் தீவிரப் போக்கையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 13 இலட்சத்து 47 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, மொத்தமாக இதுவரை 74 ஆயிரத்து 767 பேர் மரணித்துள்ளனர்.
அத்துடன் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 85 ஆயிரத்து 234 பேராகக் காணப்படுகின்ற போதும் மரணிப்போரின் வீதம் அதிகரித்துச் செல்கின்றமை தரவுகளின் மூலம் தெரியவருகிறது.
இவ்வாறிருக்க கொரோனா வைரஸ் தொற்றினால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 3 இலட்சத்து 67 ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 10 ஆயிரத்து 871 ஆகக் காணப்படுகிறது.
நேற்று ஒரேநாளில் மட்டும் அந்நாட்டில் ஆயிரத்து 255 பேர் மரணித்துள்ள நிலையில் ஏனைய நாடுகளை விடவும் இப்போது கடும் மனித இழப்புக்களை அமெரிக்கா எதிர்கொண்டு வருகிறது.
நேற்று மட்டும் 30 ஆயிரத்து 331 பேர் புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை, 8 ஆயிரத்து 879 பேர் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப் என்-95 முகக் கவசங்களைத் தயாரித்துக் கொடுக்க 3எம் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 55 மில்லியன் முகக் கவசங்களைத் தயாரித்து வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதேவேளை, அமெரிக்காவை அடுத்து கடும் பாதிப்புக்கு உள்ளாகிவரும் பிரான்ஸ் நேற்று ஒரே நாளில் 833 பேரை இழந்துள்ளது. அங்கு மொத்தமாக 8 ஆயிரத்து 911 பேர் இதுவரை மரணித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்குகிறது.
நேற்று மட்டும் அங்கு 5 ஆயிரத்து 171 பேர் புதிய நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 98 ஆயிரத்து 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஸ்பெயினில் நேற்று மட்டும் 700 பேர் மரணித்துள்ளதுடன் மொத்தமாக அங்கு 13 ஆயிரத்து 341 உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அங்கு நேற்றுமட்டும் 5 ஆயிரத்து 29 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மொத்தமாக ஸ்பெயினில் ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 675 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அங்கு 40 ஆயிரத்து 437 பேர் குணமடைந்துள்ள நிலையில் 7 ஆயிரம் பேர்வரை தீவிர சிகிச்சையில் உள்ளமை பதிவாகியுள்ளது.
இதனைவிட மற்றொரு ஐரோப்பிய நாடான இத்தாலியில் பெரும் மனித இழப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் வீரியம் சற்றுக் குறைவதாகத் தோன்றுகிறது.
அங்கு நேற்று மட்டும் 636 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணம் 16 ஆயிரத்து 523 ஆகப் பதிவாகி உலக நாடுகளில் வைரஸால் அதிக மரணங்கள் பதிவான நாடாகக் காணப்படுகிறது.
அங்கு மொத்தமாக ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 547 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் நேற்று 3 ஆயிரத்து 599 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட பிரித்தானியாவிலும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் நேற்று மட்டும் 439 பேரை பலியெடுத்துள்ளது. அங்கு இதுவரை 5 ஆயிரத்து 373 பேர் மரணித்துள்ளதுடன் மொத்தமாக 51 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட ஈரானில் நேற்று மட்டும் 136 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்த பாதிப்பு 60 ஆயிரத்து 500ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நாடுகளாக பெல்ஜியம், நெதர்லாந்து, துருக்கி, பிரேஸில் போன்ற நாடுகள் காணப்படுகின்றன.
அந்தவகையில் பெல்ஜியத்தில் நேற்று மட்டும் 185 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு 20 ஆயிரத்து 814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நெதர்லாந்தில் நேற்று மட்டும் 101 பேர் உயிரிழந்துள்ளதுடன், துருக்கியில் 75 பேரும் பிரேஸிலில் 78 பேரும் மரணித்துள்ளனர்.
இதனிடையே சுவீடனிலும் கொரோனா வைரஸால் கணிசமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுவரும் நிலையில் அங்கு நேற்று மட்டும் 76 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 477 ஆகக் காணப்படுகிறது.
மேலும், ரோமானியாவில் 25 பேரும், அல்ஜீரியாவில் 21 பேரும் மரணித்துள்ள அதேவேளை, ஈக்குவடோர், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியாவில் தலா 11 பேர் நேற்று மட்டும் மரணித்துள்ளனர்.
இதேவைளை, கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்திருந்த சீனாவில், வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதுடன் நேற்று 2 பேரின் மரணங்கள் மாத்திரம் பதிவாகியுள்ளதுடன் 39 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: