தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 911-ஆக அதிகரிப்பு
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இன்று தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சருடன் மருத்துவ ஆலோசனைக் குழுவினர் நடத்திய கூட்டத்திற்குப் பிறகு, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐசிஎம்ஆரைச் சேர்ந்த மருத்துவர் பிரதீப் கௌர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"தமிழ்நாட்டில் கொரோனாவை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. பொது சுகாதார நிலையும் நன்றாக உள்ளது. அதைப் பற்றி விவாதித்தோம். மேலும், தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், நோயாளிகளுக்கான தேவை, அவர்களின் குடும்பத்தினரின் தேவை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், களத்தில் கொரோனாவை எதிர்கொண்டு போராடிவரும் மருத்துவர்கள், செவிலியர்களின் பாதுகாப்பு குறித்து பேசினோம். தமிழகத்தில் இவ்வளவு முயற்சிகள் நடந்தபோது தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகவே, மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென பரிந்துரைத்திருக்கிறோம்." என்று அவர் கூறினார்.
மேலும், கூடுதலாகக் கிடைக்கும் இந்த 14 நாட்களிலும் நிறைய பேரை கொரோனா சோதனைக்கு உள்ளாக்க வேண்டும். நோயாளிகளின் உறவினர்கள், சுற்றி இருப்பவர்களைச் சோதிக்க வேண்டும். அப்படி நிறையப் பேரைச் சோதித்தால், நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும் என்றார் பிரதீப் கௌர்.
தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று எதிர்ப்புப் பணியில் அரசுக்கு உதவ அரசு மற்றும் தனியார் மருத்துவர்களை உள்ளடக்கிய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு மற்று தனியார் மருத்துவனைகளைச் சேர்ந்த 19 மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று இந்தக் குழுவினரிடம் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஐசிஎம்ஆரைச் சேர்ந்த பிரதீப் கௌரும் இடம்பெற்றார்.
தற்போது இந்த நிபுணர் குழுவினர் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கைப் பரிந்துரைத்திருக்கும் நிலையில், இது தொடர்பாக நாளை நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: